குற்றாலமலைப் பெருமை, Sep 6 2020

 வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே

--------------------------------

குற்றால மலயின் பெருமையை  இங்கனம் கூறுகிறார் கவிராயர்:


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்


வானரம்- பொதுவாக ஆண் குரங்கு; மந்தி - பெண் குரங்கு 


மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்


கனி பெற்ற  மந்தி  சிலவற்றை சிந்தவே வான்கவிகள்(கவி என்று குரங்கிற்கு மற்றொரு பொருளும் உண்டு) ஆதங்க படுகின்றன, அவை தவறி கீழே விழுகின்றனவே என்று!

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

கானவர்கள் - கானகத்திலிருக்கும் வேடர்/அக்கானகத்திலிருப்போர்; விழிஎறிந்து - தங்கள் பார்வையை சற்றே உயர்த்தினாலே;  வானவரை அழைப்பார் - தேவர்களிடம் பேச முடியும் அவ்வளவு உயர்ந்தது மலை!

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்


கமன - வான் வழியே பல இடங்களுக்கு செல்லும் சித்தர் - சக்தியுடையவர்; காயசித்தி - புறங்களை/காயங்களை குணமாக்கும் மருந்துகள் உள்ள மலை; அனால் இம்மலையின் உயரம் காரணமாக கமனம்  அறிந்தவர்களே வந்தடையமுடியும்!


தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்


தேனைப்போன்ற சுவையுடைய நீரைப்பொழியும் அருவியானது திரையை போல் தன பொழிவை வான் வரை கொண்டு செல்லும்! அவ்வாறு சென்று வானிலிருந்து வழிவது போல் தோன்றும்!


செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்


செங்கதிரோன்(கதிரவன்) பரி (குதிரை) யின் கால் வழுக்கும் அருவியின் பொழிப்பினால்! அவன் தேரின் சக்கரமும் வழுக்கும்!


கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்


கூனல்(வளைந்த) இளம்பிறை (சந்திரனை) முடித்த வேணி அலங்காரர்(வேணி என்றால் சடையென்று பொருள் - முடித்த வேணி அலங் காரர் - தன்  சடையின் முடியில் சந்திரனை நகையாகக்கொண்ட குற்றாலீஸ்வரப்பெருமான் வசிக்கும்)


குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாடையைக் கண்டபிறகும்...

கொடையின் தன்மை